தமிழக செய்திகள்

கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு கோவில் நிலத்தை பக்தர்கள் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட தேவ அழகர்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஜம்புதுரை, கன்னிமார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காளியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட சிலைகளும் உள்ளன. அம்மன் பூஞ்சோலை என்று அழைக்கப்படும் இப்பகுதியில் திருவிழா சமயங்களில் கரகம் ஜோடிப்பதும், பின்பு கரகத்தை கரைப்பதும் போன்ற நிகழ்வுகள் இங்கு நடைபெறும். இதே பகுதியில் 7 கன்னிமார் சிலைகளும் உள்ளன.

ஆக்கிரமிப்பு

இக்கோவிலின் அருகே தனியார் ஒருவர் நிலம் வாங்கி இருந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் பாதையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இது குறித்து போலீஸ் நிலையத்திலும், வருவாய்த்துறை அலுவலகத்திலும் புகார் அளித்ததோடு, கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.

பொதுமக்கள்

இந்நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு கோவில் நிலத்தை பக்தர்கள் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 3 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT