விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான எஸ்.ஐ.எச்.எஸ். காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 27 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சுற்றி விமான நிலைய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக தற்போது அதிகாரிகள் நில அளவீடு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதை அடைக்கப்பட்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான எஸ்.ஐ.எச்.எஸ். காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை அடைத்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நில அளவீடு செய்ய முயன்றனர். இதை அறிந்ததும் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். சுற்றுச்சுவர் கட்ட அளவீடு பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுக்கு ஏற்கனவே முறையான சாலை வசதி இல்லை. 30 அடி சாலை வசதி கேட்டால் வெறும் 5 மீட்டர் சாலை வசதி ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் கூட, குடியிருப்பு மற்றும் தோட்டப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல், விமான நிலையத்தை சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி இருப்பதால் அந்த சாலையையும் நாங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். தற்போது எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை மூடிவிட்டால் எங்களால் வேறு எங்கும் செல்ல முடியாது. எங்கள் பகுதி தனித்தீவுபோல் மாறிவிடும். எனவே அதிகாரிகள் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்துவிட்டு சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து கோவை தெற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து சாலை அளவீடு பணிகள் நிறுத்தப்பட்டன.