ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. 
தமிழக செய்திகள்

லிப்ட் வசதி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய பணிகள் தாமதத்தால் மக்கள் அவதி!

கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்குள் வருகிற பயணிகள் வசதிக்காகவும், ரெயில் நிலையத்திற்குள் நுழைய ஏதுவாக எந்த ஒரு லிப்ட் வசதியும் இதுவரை அமைக்கப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சுமார் ரூ.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேம்பாட்டு பணிகள்

அவ்வாறு புதுப்பிக்கப்படும் போது ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகளை இணைத்தப்படி பஜார் பகுதியில் இருந்து சிப்காட் பகுதியான பைபாஸ் சாலைக்கு லிப்ட் வசதியுடன் கூடிய புதிய நடைமேம்பாலம், பிரமாண்டமான நுழைவு வாயில் கட்டிடங்கள், எக்ஸ்லேட்டர் மற்றும் 4 வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள் அமைய உள்ளது.

இந்த திட்டத்திற்கான பூமி பூஜை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை காணொலி வாயிலாக நாட்டினார்.

இதில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்வின் போது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து சேவைகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும் என மண்டல ரெயில்வே நிர்வாகம் சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

75 சதவீத பணிகள்

ஆனால் அந்த பணியில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் இந்த திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை 75 சதவீத பணிகள் கூட நிறைவு பெறாத நிலையே தொடர்கிறது.

மேலும், கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்தால் செங்குத்தான படிகளில் ஏறி தான் 1, 2, 3, 4 ஆகிய பிளாட்பரங்களுக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் வயதான பயணிகள் கால்கடுக்க படிகளில் ஏறி இறங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்குள் வருகிற பயணிகள் வசதிக்காகவும், ரெயில் நிலையத்திற்குள் நுழைய ஏதுவாக எந்த ஒரு லிப்ட் வசதியும் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையம் மேம்படுத்தும் இந்த சமயத்தில் லிப்ட் வசதியை ரெயில்வே நிர்வாகம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆமை வேகத்தில்

ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் தினமும் புறநகர் மின்சார ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பணிகளையும், உடனடியாக நிறைவேற்றி தாம்பரம் ரெயில் நிலையம் போல கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திர மற்றும் வடமாநிலங்களுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்களை நின்று செல்லவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.