அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மானாமதுரை அருகே மாங்குளம் மேட்டுத்தெருவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாத நிலை உள்ளது. வாகனங்கள் பயணிக்கவும் முடியவில்லை. அவசர மருத்துவ தேவைகளின் போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து செல்வ திலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதிகாரிகள் எங்களுக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என்றனர்.