தமிழக செய்திகள்

யு.பி.ஐ. வரி விதிப்பு திட்டத்தை முற்றிலுமாக திரும்ப பெறாவிட்டால் போராட்டங்கள் தொடரும்- எஸ்.சௌந்தர்ராஜன்

யு.பி.ஐ. பரிவர்த்தனர்களுக்கு வரி அல்லது சேவை கட்டணம் விதிப்பது அப்பட்டமான மக்கள் விரோத செயலாகும்.

யுபிஐ வரி விதிப்பு திட்டத்தை முற்றிலுமாக திரும்ப பெறாவிட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது மக்கள் மற்றும் அனைத்து வணிக அமைப்புகளை ஒன்றிணைந்து தமிழகம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் தீவிரமாக நடத்தப்படும்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்களின் நலனையும் பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ள யு.பி.ஐ. பணபரி வர்த்தனைகளுக்கான வரி மற்றும் கூடுதல் கட்டண நடைமுறைகள மத்திய அரசு தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

டிஜிட்டல்

அரசின் இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை தற்காலிகமான ஒரு கண் துடைப்பே தவிர பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் எவ்வித நிரந்தர தீர்வும் அளிக்காது. டிஜிட்டல் வர்த்தகத்தையும் சாமானிய மக்களையும் முடக்கும் வரி சுமை, காய்கறி கடை, தேநீர் கடை, மளிகை கடை வரை இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் யு.பி.ஐ. போன்றவை மூலமாக மிக எளிமையாக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனங்களை ஊக்குவித்து வந்த நிலையில் தற்போது யு.பி.ஐ. பரிவர்த்தனர்களுக்கு வரி அல்லது சேவை கட்டணம் விதிப்பது அப்பட்டமான மக்கள் விரோத செயலாகும்.

வரி சுமை

இத்தகைய வரி விதிப்பால் சிறு, குறு வணிகர்களின் வர்த்தகம் நேரடியாக பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடிக்கும் ஆளாகும். பொது மக்களின் தலையிலே அந்த வரி சுமை முழுமையாக விழும். தற்போது நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகை காலம் தொடங்கியுள்ள சூழ்நிலையில், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி பண்டிகை கால கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சிறு வணிகர்களின் பண்டிகை கால வியாபாரம் தடை படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு பண்டிகை காலங்கள் நிறைவடைந்த உடன் மத்திய அரசு யுபிஐ வரி விதிப்பு திட்டத்தை முற்றிலுமாக திரும்ப பெறாவிட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது மக்கள் மற்றும் அனைத்து வணிக அமைப்புகளை ஒன்றிணைந்து தமிழகம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் தீவிரமாக நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT