இந்தியா முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், வினாத்தாள் கசிவு ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு திரும்பவும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது.
இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி காக்ரோச் ஜனதா கட்சினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தேசிய அளவில் விரிவடைந்த நிலையில், பல்வேறு அமைப்பினர் நீட் தேர்விற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில், வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாம் தழிழர் கட்சி, மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில், “நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் மற்றும் இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசை கண்டித்தும்,
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட முனையும்போது, அதனை காவல்துறையினர் மூலம் அடக்கி ஒடுக்கும் தவெக அரசை கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில் போராட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.