நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள கங்கணான்குளத்தை சேர்ந்தவர் முத்து. இவர் வாடகை கார் டிரைவர். மேலும் இவர் சொந்தமாக ஒரு காரும் வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது காரை நேற்று இரவில் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிவதை அறிந்து முத்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது கார் கொழுந்து விட்டு எரிந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து சேரன்மகா தேவி தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடைய முத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவரது அண்ணன் பாபநாச பெருமாள் என்பவர் காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் முத்துவுக்கும், அவரது அண்ணன் பாபநாச பெருமாளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. முத்துவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பாபநாசம் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்துள்ளார்.
அந்த இடத்தையும், சொத்தையும் பலமுறை முத்து தனது அண்ணன் பாபநாச பெருமாளிடம் பிரித்து தருமாறு கேட்டபோதும் அவர் சொத்தை பிரித்து தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முத்து அவரது உறவினர்களிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உறவினர்கள் இன்று பாபநாச பெருமாளிடம் நேரில் பேசி சொத்தை பிரித்து கேட்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த வர இருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாபநாச பெருமாள் நேற்று இரவு முத்து வீட்டிற்கு சென்று அங்கு வீடு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மீது கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததும், இதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக சேரன்மகா தேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரரின் காரை தீ வைத்து எரித்த பாபநாச பெருமாளை கைது செய்தனர்.