தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் வெகுவாக முன்னேறுவதுடன், தங்களுடைய பண்பாடு, மொழி, வரலாறு மற்றும் வேர்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். அரசுத் துறைகளால் தொல்லியல் எச்சங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதும், பாதுகாப்பதும் அவசியம்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, கடந்த காலத்துடன் ஆன நமது பந்தம் இன்னும் மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்த பிணைப்பை வலுப்படுத்தும் தனி நபர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்புமே இதற்கு உந்து சக்தியாக உள்ளன. இத்தகைய தனித்துவமான முயற்சியை தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியராக உள்ள செல்வராஜ் செய்து வருகிறார்.
அவர் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பல சிற்பங்களையும் பழங்கால கோவில்களையும் கண்டறிந்துள்ளார். இதன் மூலம் நமது வரலாற்றை மிக நெருக்கமாக கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் நமக்கு வாய்ப்பு அளிக்கின்றன என பாராட்டி பேசினார்.
எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் பாதர்பேட்டை ஆகும். அங்கு ஒரு கோவில் பின்பக்கம் கல்வெட்டு இருந்தது. அந்த கல்வெட்டில் இருக்கக்கூடிய தகவல்களை அறிந்தால் புதையல்கள் கிடைக்கும் என்று கிராம மக்கள் நம்பி கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் பேராசிரியரான பின்னர் புதுக்கோட்டை மியூசியத்தில் கல்வெட்டு தொடர்பாக பயிற்சி பெற்றேன். அதன்பின்னர் அந்த கல்வெட்டை நான் படித்த போது பிற்கால சோழர் கல்வெட்டு என்பதும், அதில் கோவிலுக்கு நிலம் தானமாக கொடுத்த தகவல் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. இதனை நான் கிராம மக்களுக்கு தெளிவுப்படுத்தினேன். அது மட்டுமல்லாமல் ‘காக்கை சிறகினிலே' என்ற மாத இதழில் கட்டுரையாக வெளியிட்டேன். தொல்லியல் எச்சங்களை நேரடியாக கண்டறிந்து மாணவர்களுக்கு நேரடியாக தெரிவிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதைப்போன்று நான் பல கோவில் சிற்பங்கள், சமணர் குகைகள் போன்றவற்றை கண்டறிந்துள்ளேன்.
எனது கல்லூரி மாணவி பூபதி மணப்பாறை அருகே கீழப்பழுவாஞ்சி எனும் ஊரில் வீரக்கல் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் கள ஆய்வு செய்தபோது அங்கு 3 வீர கற்கள் கண்டறியப்பட்டன. வீரக்கல் என்பது ஒரு ஊரை பற்றியும், ஊரின் நீர் நிலைகளை பாதுகாப்பது போன்ற பொதுவான பணிகளில் ஈடுபட்டு உயிர் நீத்தவருக்காக வைக்கப்படும் சிற்பமாகும். அவற்றை தொடர்புப்படுத்தி மாணவர்களுக்கு பாடம் கற்பித்தேன்.
மணப்பாறை பகுதியை பார்க்கும் போது குன்றுகள் நிறைந்த பகுதியாக உள்ளன. அங்கு பாறை குகைகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே சமணம் செழித்தோங்கிய பகுதியாக இருக்கலாம் என கருதுகிறேன். இதனை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளேன். சாமானியரான என்னை பிரதமர் பாராட்டி பேசியது பெரும் கவுரவமாக மகிழ்ச்சியாக, உள்ளது. இது மேலும் எனக்கு உந்து சக்தியை அளிக்கிறது.
தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் வெகுவாக முன்னேறுவதுடன், தங்களுடைய பண்பாடு, மொழி, வரலாறு மற்றும் வேர்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். அரசுத் துறைகளால் தொல்லியல் எச்சங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதும், பாதுகாப்பதும் அவசியம். மாணவர்களை நேரடியாக வரலாற்று இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்வதன் மூலம் அவர்களிடம் நமது வரலாறு குறித்த ஆர்வத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.