தமிழக செய்திகள்

பெரவள்ளூரில் தனியார் குடோனில் தீ விபத்து- காவலாளி மூச்சு திணறி உயிரிழப்பு

தீ விபத்து தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் சீருடையுடன் இன்று காலை பணிக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் தங்களது பணியை மேற் கொள்ள முடியாமலும் தவித்தனர்.

சென்னை பெரவள்ளூர் அகரம் எஸ்.ஆர்.பி கோவில் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தீ விபத்து

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் உடனடியாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் தனியார் நிறுவனம் ஒன்று இந்த குடோனை வாடகைக்கு எடுத்து பொருட்களை அங்கு சேமித்து வைத்து உள்ளது.

இலியாஸ்என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் இன்று காலை 6.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடோன்

குடோன் மூடப்பட்ட நிலையில் திடீரென குடோனில் இருந்து வெளியேறிய கரும்புகையை பார்த்ததும் அங்கு காவலாளியாக பணி புரிந்து வந்த ராமமூர்த்தி என்பவர் விரைந்து சென்று பார்த்துள்ளார்.

எந்த பகுதியில் இருந்து தீ பரவுகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக குடோனுக்குள் சென்று காவலாளி ராமமூர்த்தி பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

கரும்பு புகை

அப்போது தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் வேகமாக பரவியது. இதில் கரும் புகை சூழ்ந்துள்ளது. காவலாளி ராமமூர்த்தி அதில் சிக்கிக்கொண்டார். அவரால் உடனடியாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொளத்தூர் மற்றும் செம்பியம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீ விபத்து

தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மூச்சுப் பேச்சு இன்றி மயங்கி காணப்பட்ட ராமமூர்த்தியை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ராம மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரிழந்த காவலாளி ராமமூர்த்தி சென்னை மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரை சேர்ந்தவர் ஆவார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அவதி

இன்று காலை 6.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கரும்புகை வெளியேறிக் கொண்டிருப்பதால் அந்த பகுதி முழுவதும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆம்புலன்ஸ்

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு தயார் நிலையில் மருத்துவ பணியாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி? என்பது பற்றிய ஆலோசைனையை மேற்கொண்டு வருகிறார்கள்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் சீருடையுடன் இன்று காலை பணிக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் தங்களது பணியை மேற் கொள்ள முடியாமலும் தவித்தனர்.

SCROLL FOR NEXT