தமிழக செய்திகள்

கோவையில் தீபாவளியையொட்டி அரசு போக்குவரத்து கழகத்துக்காக தனியார் சுற்றுலா பஸ்கள் இயக்கம்

கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 5 ஆயிரம் பஸ்களுடன் கூடுதலாக 2 ஆயிரத்து 895 சிறப்பு பஸ்களும் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

சொகுசு இருக்கை வசதிகளை கொண்ட தனியார் சுற்றுலா பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் நேற்று முதல் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பஸ்கள் இயக்கம்

கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 5 ஆயிரம் பஸ்களுடன் கூடுதலாக 2 ஆயிரத்து 895 சிறப்பு பஸ்களும் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

அதன்படி டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், தென் மாவட்ட பஸ்கள் சிங்காநல்லூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும், நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் பஸ்கள் சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

சுற்றுலா பஸ்

மேலும் பஸ்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், தரமான கட்டமைப்பு வசதிகளை கொண்ட, சமீபத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நகர பஸ்களும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதேபோல சொகுசு இருக்கை வசதிகளை கொண்ட தனியார் சுற்றுலா பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் நேற்று முதல் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

"பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், கோவையில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் 30 தனியார் சுற்றுலா பஸ்கள் அரசு சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து சென்னைக்கு 20 பஸ்களும், மதுரை, திருச்சிக்கு தலா 5 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்கள் சில நாட்களுக்கு இயக்கப்படும்.

இந்த வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களின் டிரைவர்களே பணியாற்றுவர். அரசு போக்கு வரத்துக்கழக கண்டக்டர்கள் பணியில் இருப்பர். பயணிகளிடம் அரசு பஸ்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும். இந்த பஸ்களின் முன்பகுதியில் 'ஒப்பந்த பஸ், சிறப்பு பஸ்' மற்றும் செல்லும் வழித்தடத்தின் பெயர் ஆகியவை பெரிய அளவில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

வாகன தணிக்கை

இதற்கிடையே கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு தொலை தூர பகுதிகளுக்கு தினமும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி சிறப்பு பஸ்கள் கொடிசியா மைதானத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளன. தொடர்ந்து ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன ஆய்வாளர்கள்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், முறையாக வரி செலுத்தாத பஸ்கள் இயக்குவதை தடுக்கவும், அரசிடம் முறையாக பெர்மிட் பெறாமல் பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய பறக்கும்படை குழுவினர் கோவை கணியூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கை சோதனை நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT