சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை (வெள்ளிக் கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8,10,12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினியரிங், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம்.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
இந்த முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.