தமிழக செய்திகள்

கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகள் இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வையில் காணும் ஆணையில் அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பள்ளிகளில் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரம் செய்தும், சார்ந்த பள்ளிகளின் இணைய தளங்களில் வெளியிட வேண்டும். மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதை அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் தங்களுடைய கல்விக் கட்டணத்தை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவின்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே மேற்காணும் ஆணையினை தவறாமல் பின்பற்றி தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் 5-ந்தேதிக்குள் கல்வி கட்டணத்தை விளம்பரப்பப்படுத்த அறிவுறுத்துமாறும் மேலும் 10-ந்தேதிக்குள் சார்ந்த விவரத்தினை அறிக்கையாக இவ்வியக்ககத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் விவரங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) பள்ளி ஆய்வின்போது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் மேற்காணும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை புகைப்பட ஆதாரம் மற்றும் ஒப்புகையுடன் அனைத்து வகை பள்ளிகளில் இருந்து பெற்று தங்கள் அலுவலக கோப்பில் வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.