தமிழக செய்திகள்

ஓமலூர் அருகே பயங்கரம்- கள்ளக்காதலியின் மகனை வெட்டிக்கொன்ற தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை

உடலில் வெட்டு காயங்களுடன் ஒரு கை மணி கட்டு துண்டான நிலையில் சத்யா சத்தம் போட்டு கொண்டு அவரது அப்பா வீட்டை நோக்கி ஓடி சென்றார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவருக்கு சத்யா (33) என்ற மகளும் அசோக்குமார் என்ற மகனும் உள்ளனர். சத்யாவிற்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காமலாபுரம் ஊராட்சி பூமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மஹிஷா (13) என்ற மகளும், கிஷாந்த் என்ற 10 வயது மகனும் உள்ளனர். கருத்தானூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மஹிஷா 7-ம் வகுப்பும், கிஷாந்த் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்யா தனது கணவருடன் சேர்ந்து கருத்தானூரில் உள்ள தனது தந்தையின் நிலத்தில் கரும்பு ஆலை அமைத்து வெல்லம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ராஜ்குமார் சத்யாவை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் சத்யா தனது மகன், மகளுடன் கரும்பு ஆலையிலேயே தனியாக வசித்து வருகிறார். தற்போது சத்யா ஓமலூரில் உள்ள ஒரு வீட்டு உபயோக விற்பனை செய்யும் தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த ஷோரூமில் மேலாளராக வேலை பார்க்கும் கருப்பூர் வெள்ளாளப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், சத்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சக்திவேலிடம் சத்யா சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. மேலும் வேறு ஒரு நபருடன் சத்யா தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தன்னிடம் பேசாமல் இருப்பதாக சக்திவேல் சந்தேகம் அடைந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சக்திவேல் சத்யாவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது சத்யா வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், இதனால் அவர் கதவை திறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து சக்திவேல் கதவை தட்டியதால் சிறிது நேரம் கழித்து சத்யா வீட்டின் கதவை திறந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த சக்திவேல் சத்யா மீது ஆத்திரம் அடைந்தார். மேலும் வீட்டில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கை அணைத்துவிட்டு சத்யாவையும், அவரது மகன் கிஷாந்த் ஆகியோரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

உடலில் வெட்டு காயங்களுடன் ஒரு கை மணி கட்டு துண்டான நிலையில் சத்யா சத்தம் போட்டு கொண்டு அவரது அப்பா வீட்டை நோக்கி ஓடி சென்றார். சத்தம் கேட்டு உடனடியாக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுவன் கிஷாந்த் தலை மற்றும் கழுத்தில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

மேலும் சத்யாவும் பலத்த காயத்துடன் அலறித்துடித்தார். இதையடுத்து தாய், மகன் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் கிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சத்யா முதலுதவி சிகிச்சைக்கு பின் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓமலூர் டி.எஸ்.பி. சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் வீட்டை சோதனை நடத்தி அங்கு துண்டாகி கிடந்த கையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் ஷோரூம் மேலாளர் சக்திவேலுக்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதும், இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தப்பி ஓடிய சக்திவேலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி அருகில் உள்ள கோரிமேடு காட்டுப்பகுதியில் சக்திவேல் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்த சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்த சக்திவேலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சத்யாவுடன் சக்திவேலுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதமாக அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.