வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளையும் துப்பாக்கி பாதுகாப்புடன் அழைத்துச் செல்லவும், அவர்களை உறவினர்கள் மற்றும் வேறு நபர்கள் சந்திப்பதற்கும் புதிய கட்டுப்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் விதித்துள்ளனர்.
தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் 17 பேர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 15 கைதிகள் மீண்டும் பிடிப்பட்ட நிலையில் மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மதுரை மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பார்வையாளர் நேரத்தில் உறவினர்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்தநிலையில் தேனி சம்பவத்தையடுத்து மதுரை மத்திய சிறையில் பல்வேறு கண்காணிப்பு பணிகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அன்றாடம் கைதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க சிறைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் நேரத்தில் கைதிகள் யார் யாரை சந்திக்கிறார்கள் என்ற விவரத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் சிறை வளாகத்தை சுற்றியுள்ள மதில் சுவர்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையின் வெளியே சாலை பகுதிகளிலும் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கைதிகளின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் இருப்பின் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சிறைத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளையும் துப்பாக்கி பாதுகாப்புடன் அழைத்துச் செல்லவும், அவர்களை உறவினர்கள் மற்றும் வேறு நபர்கள் சந்திப்பதற்கும் புதிய கட்டுப்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் விதித்துள்ளனர்.