சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் தேனி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப்டடார். அவருக்கு பதில் புதிய டி.ஜி.பியாக சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தையடுத்து சிறைத்துறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் 9 பேர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளையும் இடமாற்றம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
அந்த வகையில் மதுரை, கடலூர், சேலம் ஆகிய 3 சிறைகளிலிருந்தும் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணராஜ் சேலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் சூப்பிரண்டாக இருந்த பரசுராமன் மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளார். சேலம் கூடுதல் சூப்பிரண்டு வினோத் கடலூர் மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.