முருங்கைக்காய், வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறி விற்பனைக்கு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்து போனது. காய்கறி விற்பனை மந்தமாகி போனதால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
வியாபாரிகள் வருகை குறைந்ததாலும், வரத்து அதிகரிப்பாலும் பீன்ஸ், அவரைக்காய் மற்றும் கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.75 வரையிலும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.60 வரைமிலும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ பீன்ஸ், அவரைக்காய் ரூ.40-க்கு விற்கப்பட்டது. அதேபோல் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும் வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.15-க்கும் விற்பனை ஆனது. விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் வாங்கி செல்ல வியாபாரிகள் அதிகளவில் இல்லை.
முருங்கைக்காய், வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.