ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியானது ஒவ்வொரு வீட்டிலும் அன்றாட சமையலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழமாகும். குழம்பில் சுவை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. அசைவ உணவுகளிலும் சரி, சைவ உணவுகளிலும் சரி அதிகளவு பயன்படக்கூடியது. குறிப்பாக தக்காளி சாதம், சட்னி, தொக்கு, குழம்பு, சாம்பார், ரசம் போன்ற உணவில் அதிகளவு இடம் பெற்றிருக்கும்.
சமையல் இல்லாமல் சாலட், ஜூஸ், சூப் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு தக்காளி பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவார்கள். இத்தகையை தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. இப்படி தக்காளி பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுவதால் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு யார் சென்றாலும் முதலில் தக்காளியை தான் தேடி வாங்குவது உண்டு.
அப்படி தேடி விரும்பிய தக்காளி இந்த மாத தொடக்கத்தில் இருந்து விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை ஏற்றத்திற்கு தற்போது நிலவி வரும் சுட்டெரிக்கும் வெயில் தான் காரணம். சேலம் மாவட்டத்தில் மேச்சேரி தக்காளி புகழ் பெற்றதாகும். சேலம் மாவட்டத்தில் இந்த நாட்டு தக்காளி மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
அது போல் நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா, ஊரம்பு, மங்களபுரம், ராஜபாளையம், முள்ளுக்குறிச்சி, ஒன்பதாம் பாலிகாடு உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடும் கோடை வெயில் காரணமாக செடியிலேயே தக்காளி பழங்கள் காய்ந்து வருகின்றன. தக்காளி பிஞ்சு, பூக்கள் கருகி விடுகின்றன. இது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது குறித்து விவசாயிகளை கூறுகையில், ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது நல்ல விளைச்சல் கிடைத்து வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த பழங்கள் கடும் வெயிலின் காரணமாக செடிகளிலேயே காய்ந்து விட்டன. சிலர் தற்காலிகமாக நிழல் வலை அமைத்து பயிர்களை பாதுகாக்க முயற்சித்தாலும் முழுமையாக பலன் அளிக்கவில்லை. இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.