தமிழக செய்திகள்

சின்ன வெங்காயம் கிலோ ரூ.200 ஆக அதிகரிப்பு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாகவே 2 லாரிகளில் தினசரி 20டன் வரையிலான சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

வெளி மார்க்கெட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.250வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் சின்ன வெங்காயம் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.150வரை விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.200-க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.250வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முருங்கைக்காய்

இதேபோல் வரத்து குறைவால் மொத்த விற்பனையில் அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும், பீன்ஸ் மற்றும் நைஸ் கொத்தவரங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.65வரையிலும், உஜாலா கத்தரிக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

பச்சை காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20வரை அதிகரித்து உள்ளது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான ஓட்டல்களில் அதன் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

வெளி மார்க்கெட்

வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.80வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயம் விலையும் கிலோ ரூ.200-க்கு மேல் அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன வெங்காயம் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி கார்த்திக் கூறியதாவது:-

திருச்சி, பெரம்பலூர், கோவை சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 8 முதல் 10 லாரிகளில் சுமார் 100டன் வரை சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது பரவலாக பெய்த மழை காரணமாக அதன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

கடந்த சில நாட்களாகவே 2 லாரிகளில் தினசரி 20டன் வரையிலான சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

சின்ன வெங்காயம்

இனி வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தின் அறுவடை மழை பாதிப்பு ஏதும் இல்லை என்றால் திட்டமிட்டபடி தை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதன் பிறகே சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT