மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி குறைவால், இந்த ஆண்டு தீபாவளி பட்டாசுகளின் விலை 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து, விடுமுறை நாட்களில் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு அடுத்த ஆண்டு வரும் தீபாவளிப் பண்டிகையை எதிர்நோக்கி பட்டாசுத் தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிப்பை தொடங்குவது வழக்கம். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் சிறிய, பெரிய என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2026-ம் ஆண்டிற்கான பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த சில நாட்களில் தொடங்கியது. இந்நிலையில் அடிக்கடி ஏற்பட்ட பட்டாசு ஆலைகளின் வெடி விபத்தைச் சுட்டிக்காட்டி நடத்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வின் காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மேற்காசிய நாடுகளில் நிலவிய போர்ப் பதற்றத்தினால் பட்டாசு தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயர்வு, விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமையே தொடர்ந்து விபத்துக்கள் நடந்ததால், தீபாவளியை எதிர்நோக்கி விடுமுறை தினங்களான ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தியை நிறுத்தம் செய்தது போன்ற பல்வேறு காரணங்களால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்து பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 11 மாத காலமாக பட்டாசு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு இன்னமும் ஒரு மாத கால இடைவெளியே இருப்பதால் வருகிற தீபாவளியை முன்னெடுத்து பட்டாசு உற்பத்தியில் மும்மரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள், நடப்பாண்டின் 30 சதவீத பட்டாசு உற்பத்தி குறைவு மற்றும் மூலப் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களினால் தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு விலை 25 சதவீதம் வரை கூடுதலாக இருக்குமென்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பதற்கும், வெடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால் தற்போது சரவெடி வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் இறுதி கட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது பெரிய அளவில் உற்பத்தியை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவே அடுத்த ஆண்டு அதிகளவில் சரவெடி தயாரிப்பதற்கு இந்த அறிவிப்பு மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், இந்த தொழிலை நம்பி உள்ள ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கூடிய நிலை இருக்கும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு ஒருமாதமே இருப்பதால் குறைந்த கால அவகாசத்தில் சரவெடி தயாரிப்பில் பெரிய பட்டாசு ஆலைகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
மேலும் இறுதிக்கட்ட தயாரிப்பிற்கு அதிகாரிகளின் ஆய்வின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.