தமிழக செய்திகள்

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் முதலை நடமாட்டம்

முதலை நடமாட்டம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதி மக்கள் பவானி ஆற்றுக்கு செல்லவே இல்லை

முதலை நடமாட்டம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் பவானி ஆறு செல்கிறது. இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பவானி ஆற்றில் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர்.

பலத்தமழை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று நீலகிரி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது .

இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவானி ஆற்றில் வழக்கம் போல் பெண்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று பவானி ஆற்றில் நீந்தி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அலறி அடித்துஓட்டம்

இதை பார்த்து பெண்கள் கூச்சலிட்டு அந்த பகுதியில் இருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பெண்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பவானி ஆற்றுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது பெரிய அளவில் முதலை நீந்தி சென்று கொண்டிருந்தது. இதனை அந்த பகுதியில் இருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

முதலை நடமாட்டம்

முதலை நடமாட்டம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதி மக்கள் பவானி ஆற்றுக்கு செல்லவே இல்லை. முதலை நடமாட்டம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

பவானி ஆற்றில் பெண்கள் அதிக அளவில் துணி துவைத்து வந்தனர். இந்நிலையில் கனமழை காரணமாக பவானி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்கிறது. திடீரென முதலை நடமாட்டம் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10 அடி முதலை

முதலை பார்ப்பதற்கு பெரியதாக 10 அடிக்கு இருக்கும். இதுவரை பவானி ஆற்றில் முதலை நடமாட்டம் இருந்தது இல்லை. தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தில் முதலை ஆற்றில் அடித்து வந்து இருக்கலாம்.

இதனால் அச்சம் அடைந்துள்ள எங்கள் பகுதி மக்கள் பவானி ஆற்றுக்கு செல்லவே இல்லை. கண்டிப்பாக முதலை பவானி ஆற்றிலே தான் இருக்கும். உடனடியாக வனத்துறையினர் மக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT