மதுராந்தகம் பகுதியில் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள். 
தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளதால், அப்பகுதியில் அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

தாராபுரத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பறக்கும் படைகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் பணிகள்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டுசெல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களும் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டன.

தேர்தல் அலுவலர்

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (9-ந்தேதி) தொடங்க உள்ளதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரப்பன், மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் நரேந்திரனை, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலராக நியமித்து உள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வரு கின்றன. அந்த கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. மேலும் அந்தந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் தேர்தல் பணிகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

மரகதம் குமரவேல்

2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்றிருந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். தி.மு.க. வேட்பாளர் அம்முலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் எழில் கேத்தரினை விட அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

வேட்பாளர் யார்?

சமீபத்தில் மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாராபுரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளதால், அப்பகுதியில் அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

​தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கோட்டை

தாராபுரம் தொகுதி எப்போதுமே அ.தி.மு.க.வின் பலம் வாய்ந்த கோட்டையாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி தங்களது செல்வாக்கை நிரூபிக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தொகுதியில் பிரபலமான ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றியை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா த.வெ.க.வில் இணைந்துள்ள நிலையில், தாராபுரத்தில் வெற்றி பெற்று சட்டசபையில் தங்களது குரலைப் பதிவு செய்ய த.வெ.க. திட்டமிட்டுள்ளது.

தாராபுரத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பறக்கும் படைகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT