விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதி முழுவதும் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று காலையில் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள பூங்கா, பெரியார் நகர் மேம்பாலம், பொன்னேரி புறவழிச்சாலை ரவுண்டனா ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது :-
நாளை எம்.எல்.ஏ. அலுவலகம் திறக்கப்பட உள்ளது. அங்கு அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து பொதுமக்களின் குறைகளை தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் கலெக்டரை சந்தித்து விருத்தாசலம் தொகுதி மக்களின் குறைகளை மனுவாக கொடுக்க உள்ளேன். மீண்டும் தமிழக முதலமைச்சர், துறை வாரியான அமைச்சர்களை சந்தித்து விருத்தாச்சலம் தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளேன்.
புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மக்கள் எதிர்பார்ப்பை இந்த ஆட்சி பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து கேட்டதற்கு, விவசாயிகள் கடன் தள்ளுபடியை ஏற்கவில்லை. கண்துடைப்பு எனக் கூறுகிறார்கள். ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்யும் விவசாயிகள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லை. அவர்கள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்கிறார்கள். ஆனால் அவ்வாறு மூடப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அரசு மூடப்படுவதாக கூறிய அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இல்லையேல் அது கண்துடைப்பாக மாறிவிடும்.
தமிழகம் முழுவதும் தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அரசு தீர்க்க வேண்டும் என்றார்.