தமிழக செய்திகள்

தேர்தல் முடிவு கவர்ச்சிக்கும், மாயைக்கும் கிடைத்த வெற்றி - பிரேமலதா

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்த அனைவருக்கும், வாக்களித்து ஆதரவு அளித்த மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டு, 1 தொகுதியில் வெற்றி பெற்றது. மக்கள் மனநிலையின் வெளிப்பாடு மட்டுமல்ல; இத்தேர்தல் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி. அதனால் நாம் யாரும் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி, விஜயகாந்த் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலே தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம். விஜயகாந்த் மீதும் தே.மு.தி.க. மீதும் மக்கள் வைத்துள்ள பற்றும், பாசமும், நம்பிக்கையும், மரியாதையும் இம்மியளவும் குறையவில்லை என்பதை மக்களை நேரடியாக சந்திக்கும்போது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.

மேலும், மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்த அனைவருக்கும், வாக்களித்து ஆதரவு அளித்த மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்காலிகத்தை கண்டு துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடன் சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல், உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நம் இலக்கை அடைய வீறுகொண்டு நடைபோடுவோம். மாற்றம் ஒன்றே மாறாதது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.