தமிழக செய்திகள்

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் முதல் எம்பி வேட்பாளர் என்பதில் பெருமை - பிரவீன் சக்ரவர்த்தி

இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன்.

நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி. பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த காலியிடம் அ.தி.மு.க.வை சேர்ந்த சி.வி.சண்முகம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதால், அந்த பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்டது.

இந்த பதவிக்கு த.வெ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்து, மாநிலங்களவை எம்.பி. பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும் முதலமைச்சரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. இடம் காங்கிரசுக்கு த.வெ.க. விட்டுக்கொடுத்தது.

இதையடுத்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று இரவு வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்

என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.