தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை விவசாயிகள் புறக்கணிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் தமிழக உரிமை தி.மு.க. ஆட்சியில் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை:

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2021-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. 2021 தேர்தல் அறிக்கையில் கொடுத்த விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை. விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிக்கும் நோக்கோடு தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் ஏரிகள், குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும், விளைநிலங்களையும் அபகரிக்கின்றனர்.

மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சர் 5 ஆண்டு காலம் பொறுப்பேற்றது முதல் கர்நாடக முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக நட்பு பாராட்டுகிறார். இதனால் தமிழ்நாடு பெற்ற உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

அதே போன்று முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் தமிழக உரிமை தி.மு.க. ஆட்சியில் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு, விவசாயிகளை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருவதற்கு முடிவு கட்டும் வகையில் வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை விவசாயிகள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.