கரூர் மாவட்டம் இளவானூர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஆர். பிரபு, 4 மாத கடுமையான உழைப்பில் வெண்மையான பருத்தி துணியில் 133 அதிகாரங்களை உள்ளடக்கிய திருக்குறள் புத்தகத்தை உருவாக்கி, முதலமைச்சர் விஜய்க்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் இளவானூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஆர்.பிரபு. இவர் தமிழ் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை உள்ளடக்கிய பிரத்யேக துணி புத்தகத்தை 4 மாத கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளார்.
ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட இந்த நூலில் உள்ள திருக்குறள்கள் அனைத்தும் வெண்மையான பருத்தி துணியில் அச்சிடப்பட்டு உள்ளன. முன்னதாக பருத்தித் துணியில் திருவள்ளுவரின் உருவத்தை நெய்து பார்த்த அனுபவத்தின் அடிப்படையில், துணியிலேயே முழு திருக்குறள் புத்தகத்தையும் உருவாக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் துணியை விலைக்கு வாங்காமல், தமது சொந்த விசைத்தறியிலேயே தூய பருத்தி நூலைக் கொண்டு துணியை நெய்து, அதை பக்கங்களாக வெட்டி, கையால் செய்யப்படும் ‘மேனுவல் ஸ்கிரீன் பிரிண்டிங்’ முறையில் தமிழ் குறள்களை அச்சிட்டு, தோல் அட்டையால் பிணைப்பு (பைண்டிங்) செய்துள்ளார்.
திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது 3 புத்தகங்களை முழுமையாக உருவாக்கியுள்ள இவர், மேலும் 7 புத்தகங்களை பிணைப்பு பணிக்காக தயார் நிலையில் வைத்து உள்ளார்.
ஒரு புத்தகத்தை உருவாக்குவதற்கு சுமார் ரூ.25,000 செலவாகியுள்ள நிலையில், இதுவே தனது முதல் முயற்சி என்றும், எதிர்காலத்தில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப உற்பத்திச் செலவை குறைக்க முடியும் என்றும் கூறியுள்ளார். தமது தாத்தா மற்றும் தந்தையின் வழியில் சிறுவயது முதலே நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், புதிய பொருட்களை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறப்புமிக்க திருக்குறள் புத்தகத்தை முதலமைச்சர் விஜய்க்கு பரிசளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.