தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வன்னியரசுக்கு ஆளுநர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, திருமாவளவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில்," முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி —
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!
பெரியாரின்
‘காலதேச வர்த்தமான’ த்திற்கு
காத்திருப்போம் ; என்றாலும்
களமாடுவோம் !
வெற்றி நமக்கே!!" என குறிப்பிட்டிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம்
ஆற்றாமையால் அள்ளிவீசும்
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா
அனலில் தகித்து போவீர்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.