முரசு புயலின் தீவிரம் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முரசு புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெற இருந்த செய்முறைத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முரசு புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 90 பேர் ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.