தமிழக செய்திகள்

பிரேத பரிசோதனை நிறைவு - கோவை சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சிறுமியின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் ஆகியோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமைச்சரிடம், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.

இதற்கிடையே, சிறுமியின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உறவினர்கள் கூறுகையில்,

சிறுமியின் உடலை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. வெறிகொண்ட நாய் குதறியதுபோல் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் கிடைத்துள்ளது.

சிறுமியின் கை, முகம், கண்கள் என எதுவும் இல்லை. எல்லாம் முழுவதுமாக சிதைந்து உள்ளது. உடல் முழுவதும் காயம் உள்ளது. சிறுமியின் கழுத்தை முழுவதுமாக திருப்பி அவளது தலைமுடியைக்கொண்டே கழுத்தை நெரித்துள்ளனர்.

சிறுமியை கொடூரமாக கொன்றவர்களை அதைப்போலவே கொடூரமாக கொல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் கூறுகையில்,

எதிர்வீட்டில் முன்பு வசித்த நபர் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித்தருவதாக பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

நன்றாக தெரிந்த நபர் என்பதால் என் குழந்தை அவருடன் சென்றுள்ளார். வீடு திரும்பாததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம்.

எதிர்வீட்டில் முன்பு வசித்த நபர் தான் அழைத்து சென்றது தெரிந்ததால் கேட்டபோது அப்போதே இறக்கி விட்டுவிட்டேன் எனக்கூறினார்.

எங்களுடனே சிறுமியை தேடுவதாக வந்து தேடி நாடகம் ஆடியுள்ளான். என் பிள்ளையை கொடூரமாக கொன்றுள்ளான் என்று கூறினார்.