மழை 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 23-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

டிசம்பர் முதல் வாரத்தில் தெற்கு அல்லது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அக்வான் புயல் காரணமாக 22-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவினாலும், 23-ந்தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்வான் புயல் ஆந்திரா, ஒடிசா நோக்கி செல்வதால் தமிழகத்தில் 22-ந்தேதி வரை வறண்ட வானிலை காணப்படும். அதன் பின்னர் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது:-

கனமழை பெய்ய வாய்ப்பு

புயல் கரையை கடந்து முழுவதுமாக விலகி சென்றதும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக 23-ந்தேதி முதல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த மாதம் இறுதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும். அதன் பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில் தெற்கு அல்லது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அது புயலாக உருவாகுமா என்பது பற்றி இப்போது கணிக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT