தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு- வானிலை நிபுணர் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை நிபுணர்கள் எச்சரிக்கையின்படி, கடலோர மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ‘எல்நினோ’ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யவில்லை. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று முழுமையாக விலகியது.

வடகிழக்கு பருவமழை

இதனால் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுகிறது.

மிக கனமழை

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

29 மாவட்டங்கள்

நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

17-ந்தேதி

வருகிற 17-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை திருப்பூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வருகிற 18-ந்தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகிற 20-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில்

உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்தர் கூறியதாவது:-

வடமாநிலங்களில் இன்று வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவு பெற்றது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது.

‘தீவிர எல்நினோ’

தற்போது தமிழகத்துக்குள் குளிர்ந்த காற்று ஊடுருவும் சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக வருகிற 20-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் ‘எல்நினோ’ உருவானது. இதனால் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யவில்லை. அதன் பிறகு ‘எல்நினோ’, ‘சூப்பர் எல்நினோ’வாக மாறியது. தற்போது ‘தீவிர எல்நினோ’வாக உருவெடுத்து உள்ளது.

இதன் காரணமாக தென்மேற்கு பருவமழைக்கு நேர்மாறாக வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் பெய்யும்.

இயல்பைவிட அதிகம்

வடகிழக்கு பருவமழை காலத்தின் போது அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வழக்கமாக தமிழகத்தில் 44 சதவீதம் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 60 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பை விட மழை அதிக அளவில் பெய்யும். அதாவது இயல்பை தாண்டி ஒரே நாளில் 20 செ.மீட்டர் முதல் 24 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒரே நாளில் 50 செ.மீ. மழை

நவம்பர் மாதத்தில் சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரே நாளில் 40 செ.மீட்டர் முதல் 50 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளத்தில் மிதக்கும் அபாயம்

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. வரை மழை பெய்யும் என்று தனியார் வானிலை நிபுணர் எச்சரித்துள்ள நிலையில் சென்னை முழுவதும் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT