தமிழக செய்திகள்

பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் மெட்ரோ தடம் சுரங்கப்பாதையாக நீட்டிப்பு-விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிப்பு!

இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த தோராயமாக 4,300 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், கலங்கரை விளக்கம் முதல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வரையிலான புதிய மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கை முழுமையாக நிறைவடைந்துள்ளது. 'சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த முக்கிய ஆவணத்தை, ஒப்புதலுக்காக இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் கட்டத் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 26.1 கிலோமீட்டர் தொலைவிற்கு உருவாக்கப்பட்டு வரும் 4-ஆவது வழித்தடத்தின் நீட்டிப்பாக இந்தப் புதிய பாதை அமையவுள்ளது. முற்றிலும் பூமிக்கு அடியில் சுரங்கப் பாதையாக அமையவிருக்கும் இந்தத் தடம் சுமார் 5.69 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த தோராயமாக 4,300 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 5.69 கி.மீ நீளமுள்ள புதிய சுரங்க வழித்தடத்தில் எழிலகம், தீவுத்திடல், தலைமைச் செயலகம் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆகிய நான்கு முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. தற்போது பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள், இந்த விரிவாக்கத்தின் மூலம் எவ்வித தடையுமின்றி நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்கும் உயர் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியும்.

இந்த புதிய மெட்ரோ தடம் செயல்பாட்டுக்கு வரும்போது, தலைமைச் செயலகம் மற்றும் எழிலகம் ஆகிய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், உயர் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும் பயனடைவார்கள்.

மேலும், சென்னையில் முக்கியக் கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்வுகள் நடைபெறும் இடமான தீவுத்திடலுக்கும் நேரடியாக மெட்ரோ இணைப்பு கிடைப்பதால், லட்சக்கணக்கான பொதுமக்களின் தினசரிப் பயணம் மிகவும் எளிதாகும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த அறிக்கை இறுதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.