சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்களைக் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனு எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது" என வாதிட்டார்.
புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும், பொன்முடிக்கு எதிரான வழக்கை தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு பொன்முடி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டது. பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட் உத்தரவின்படி, பொன்முடியைக் கைது செய்து செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.