கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 16வயது சிறுவன் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாமா வீட்டிற்கு வந்து இருந்தார். சிறுவன் குடும்பத்துடன் பெரியபாளையம் மற்றும் சிறுவாபுரி கோவிலுக்கு சென்று வந்தார். பின்னர் சிறுவனின் பெற்றோர் இருவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். சிறுவன் மட்டும் உறவினர் வீட்டிலேயே தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சிறுவனின் உறவினர் வீட்டிற்கு அவரது மாமாவின் நண்பரான வடபழனி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலைபார்த்து வரும் வேலப்பன் வந்தார். அப்போது போலீஸ்காரர் வேலப்பன் மற்றும் சிறுவனின் மாமா சேர்ந்து மதுகுடித்ததாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சிறுவனின் மாமா தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவில் போலீஸ்காரர் வேலப்பன் திடீரென சிறுவன் இருந்த படுக்கை அறைக்குள் புகுந்தார். அவர் புகுந்து அங்கு டி.வி. பார்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார். மேலும் சிறுவனின் வாயில் மதுவையும் ஊற்றி சித்ரவதை செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அலறி கூச்சலிட்டபடி அருகில் இருந்த டி.வி. ரிமோட்டால் போலீஸ்காரர் வேலப்பனை தாக்கி கீழே தள்ளிவிட்டார். பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பிய சிறுவன் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு நடந்தே அசோக் நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்த போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி கதறி அழுதார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த போலீஸ்காரர் வேலப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் சிறுவனிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ் ஏட்டு வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நள்ளிரவில் மது போதையில் போலீஸ்காரர் ஒருவர் சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.