அய்யய்யோ...!
இந்த மதுமிதாவும் இப்படியா? என்பதுதான் இப்போது வலைதளவாசிகளின் அதிர்ச்சி. கடந்த 24-ந்தேதிக்கு முன்புவரை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மதுமிதா எல்லோரையும் ஆச்சரியத்தில் அதிர வைத்துக் கொண்டு இருந்தார். கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... ஏராளமான தங்க நகைகள்... இவைகளை கழுத்தில் அணிந்தும் ரூபாய் நோட்டுக்கட்டுகளால் மகளுக்கு அபிஷேகம் செய்வது போலவும், மெத்தை மீது அள்ளி வீசி பணத்தின் மீது புரள்வது போலவும் இவர் வெளியிட்டு வந்த ரீல்ஸ்களை பார்த்து வலைத்தளவாசிகள் கிறங்கி போனார்கள்.
அம்மாடி... எவ்வளவு பணம்... சின்ன பொண்ணாட்டம் இருக்கிறாள். இவளிடம் இவ்வளவு பணம், நகைகளா? அப்படின்னா எவ்வளவு பெரிய பணக்காரியா இருப்பா என்று ஒவ்வொருவரும் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். ஆனால் இவர் யார்? எங்கே இருக்கிறார்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
முக்கியமாக 4 லட்சம் பேருக்கும்மேல் அவரை பின் தொடர்ந்த நிலையிலும் இவர் ஒருவரைக்கூட பின் தொடரவில்லை என்பது அதைவிட ஆச்சரியமானது.
எந்த இன்ஸ்டாகிராம் மூலம் வலைத்தள உலகத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாரோ அந்த பக்கத்தின் மூலமே கொஞ்சம் கொஞ்சமாக அவரது சாயமும் வெளுக்கத் தொடங்கி உள்ளது.
கடந்த 24-ந்தேதி இவர் இல்லாத போது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளி சென்றார்கள். இவர் வீட்டில் பணம் இருப்பதையும், நகை இருப்பதையும் இன்ஸ்டாகிராமில் பார்த்துதான் கொள்ளையடித்ததாக கைதான கொள்ளையர்களும் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தார்கள்.
இவளுக்கு இதுவேண்டும். இப்படியா நகை, பணத்தை ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுவது? என்று திட்டியவர்கள் பலர். அதே நேரம் போலீசின் கண்கள் வேறு விதமாக ஊடுருவியது. யார் இவர்? இவரது பின்னணி என்ன? என்பதை எல்லாம் ஒவ்வொன்றாக துருவத் தொடங்கினார்கள்.
அப்போது தனது கணவர் வினோத் குமார் சிவகாசியை சேர்ந்தவர் என்றும், ஏலக்காய் வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் மதுமிதா தெரிவித்தார்.
வினோத் குமார், மதுமிதா தம்பதிகள் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் வி.ஐ.பி. கார்டன் என்ற இடத்தில் மிகப்பெரிய பங்களா வீட்டை வாங்கி இருக்கிறார்கள். அந்த வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்.
சிவகாசியை சேர்ந்தவர்... ஏலக்காய் வியாபாரம் செய்பவர்... அந்த வியாபாரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் சம்பந்தம் இல்லையே? அப்படி இருக்க இங்கு சொந்த வீட்டில் குடியேறியது எப்படி? என்பது போலீசாரின் மண்டையை குடைந்தது. அப்போது தனக்கு கோவை சொந்த ஊர் என்றும் கணவர் வினோத்குமார் வியாபாரம் ரீதியாக கோவைக்கு வந்த போது காதல் மலர்ந்து கல்யாணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
போலீசார் கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிக் கொண்டிருந்த போதே அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து ரீல்ஸ்களை போட்டும், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது குழந்தையின் பள்ளி விடுமுறையையொட்டி நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டும் அதை காட்சியாக்கி ரீல்ஸ் போட்டு இருந்தார். எந்த கவலையும் இல்லாமல் மதுமிதா இருந்தது கூடுதல் சந்தேகத்தை போலீசாருக்கு ஏற்படுத்தியது. இதுவரை 6,688 வீடியோக்களை அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
கொள்ளை சம்பவத்திற்கு பிறகு அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. வருமான வரித்துறைக்கும், மதுமிதாவின் செயல்கள் கண்ணை உறுத்தியது. பணம் எப்படி வருகிறது? என்பதை ஆய்வு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். தொடர்ந்து மேல் அதிகாரிகளின் உத்தரவுப்படி போலீசார் அவரது பின்னணியை விசாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது கிடைத்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் வழக்கு ஒன்றில் சிக்கி மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அவர் தனது ஊரை சிலரிடம் கோவை என்றும், மற்றும் சிலரிடம் திருப்பூர் என்றும் கூறி இருக்கிறார். ஆனால் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம்தான் இவரது சொந்த ஊர் என்றும் இவரது தாயார் வில்லிசை கலைஞர் என்றும் தெரிய வந்துள்ளது.
வலைத்தளத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வலம் வந்த மதுமிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் ஒருவரை காதலித்து திருமணம் செய்ததும் தெரிய வந்தது. அப்போது நெல்லை மற்றும் கோவையில் மசாஜ் சென்டர்களில் பணியாற்றியதும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் நேற்று திடீரென்று ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மதுமிதா மீது வீசிய குண்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிகவும் வசதியானவரான அந்த காண்டிராக்டர் கடந்த 2022-ம் ஆண்டு நெல்லையில் ஒரு மசாஜ் சென்டரில் மதுமிதாவை சந்தித்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து போனில் தன்னோடு பேசி தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறினார். ஒரு முறை நெல்லையில் தன்னை சந்திக்கும்படி மதுமிதா நிர்பந்தித்ததாகவும் அதை ஏற்றுக் கொண்டு அவரை தேடி சென்ற போது கே.டி.சி. நகரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது காரில் ஏறி வந்ததாகவும் காரில் சென்ற போதே அவருக்கு மசாஜ் செய்ததோடு கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் அபேஸ் செய்து விட்டதாகவும் கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ந்த போலீசார் இன்னும் எத்தனை தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு இருப்பாரோ, தெரியவில்லையே? என்று மீசையை முறுக்கத் தொடங்கினார்கள். புதிய வழக்கு பதிவானதை தொடர்ந்து மதுமிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக வி.ஐ.பி. கார்டனில் உள்ள அவரது பங்களா வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் யாரும் இல்லை. போலீசாரின் சந்தேகப்பார்வை தீவிரம் அடைந்து பிடி இறுகுவதால் மதுமிதா குடும்பத்துடன் தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அவர் எங்கு சென்றுள்ளார்? என்பது பற்றி அறிவதற்காக அவரது செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொள்ள முயன்ற போது, போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் செல்போன் டவர்கள் மூலம் அவரது இருப்பிடத்தை போலீசார் தேடி வருகிறார்கள். இப்படி மதுமிதாவின் இன்னொரு பக்கம் அம்பலமாகி வரும் நிலையில் மேலும் பலர் போலீசாரிடம் துணிச்சலாக புகார் அளித்து வருகிறார்கள்.
பெரும்பாலும் சபலத்தில் வீழ்ந்தவர்களே இப்படி நகை மற்றும் பணத்தை மதுமிதாவிடம் இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மதுமிதாவுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? பின்னணி என்ன? என்பது மர்மமாக இருக்கும் நிலையில் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல் இன்ஸ்டாகிராமில் என்னைப் பார்... என்னிடம் இருக்கும் பணத்தை, நகையை பார்... என்று வெளிச்சம் போட்டு காட்டி இன்று வீதிக்கு வந்துள்ளார். அதுமட்டுமல்ல அவரது பின்னணியும் வெளிப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘சாதாரண கொள்ளை வழக்காக நினைத்த எங்களுக்கு மதுமிதாவை பற்றி வரும் தகவல்கள் ஆச்சரியமாக உள்ளது. இன்னும் பல தகவல்கள் வெளிவரும். அதன் பிறகுதான் மொத்த உண்மையும் வெளிப்படும்’ என்றனர்.