சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 29). இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் 3-வதாக கர்ப்பமான கீதா, கடந்த 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு 15-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது கணவர் தேவராஜ். வெல்டிங் வேலைக்கு சென்று விடுவதால் தனியாக இருந்த கீதாவுக்கு ஒரு பெண், கடந்த 4 நாட்களாக உதவுவது போல பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது கணவர், உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. எனவே கீதா, தானாக ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு சென்று விடலாம் என்று பகல் 2.30 மணி அளவில் முகலிவாக்கம் செல்ல குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அந்த பெண், தானும் கொடுங்கையூர் செல்ல வேண்டி உள்ளது. உன்னை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள டீ கடை அருகில் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண், ஆட்டோ பிடித்து வருவதாக கூறி கீதாவை கடை அருகே காத்திருக்கும்படி கூறிவிட்டு குழந்தையை வாங்கி கொண்டு எதிரே உள்ள பஸ் நிலையத்துக்கு சென்றார். திடீரென அவர், குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி மாயமாகிவிட்டார். அதன்பிறகுதான் அந்த பெண், தனது குழந்தையை கடத்திச்சென்றதை அறிந்த கீதா அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ராயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். குழந்தையை கடத்தி சென்ற 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் தனது பெயர் மேரி என்றும், அவரது கணவர் என்று கூறி ஒருவரை அறிமுகப்படுத்தி நெருங்கி பழகியதால் நம்பிக்கையோடு குழந்தையை அவரிடம் கொடுத்ததாகவும் போலீசாரிடம் கீதா கூறினார்.
இதையடுத்து பிறந்து 9 நாளே ஆன குழந்தையை கடத்திச்சென்ற மர்ம பெண்ணை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடினர். மேலும் அந்த பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து நடத்திய விசாரணையில், பள்ளிக்கரணையில் இருப்பது தெரிந்தது.
பள்ளிக்கரணை சென்ற போலீசார், குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். கைதான பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடத்தப்பட்ட 7 மணிநேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.