தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பேரணி நடத்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மீண்டும் மீண்டும் அனுமதி மறுத்த தமிழ்நாடு காவல்துறையையும் கண்டித்துள்ளது.
தொடர்ந்து இந்த விவகாரத்தை நீட்டிக்க வேண்டாம் என்றும், பேரணிகள் மற்றும் அதைத் தொடர்ந்த பொதுக் கூட்டங்களுக்கான நேரத்தையும், இடங்களையும் அக்டோபர் 19-க்குள் இறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய நீதிபதி வி. லட்சுமிநாராயணன்,
“தமிழ்நாடு காவல்துறையைப் பாராட்டி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நிராகரிப்பிற்காக அவர்கள் எந்தப் புதிய காரணங்களையும் முன்வைக்கவில்லை. இந்த நீதிமன்றம் வலுவற்றவை எனக் கருதிய அதே காரணங்களையே அவர்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.” என தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோற்றுவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 128 இடங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த அனுமதிக் கோரி அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் வி. ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பேரணி நடத்த முன்மொழியப்பட்ட வழித்தடங்களில் பிற சமூகத்தினருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்கள் இருப்பது, பகுத்தறிவுவாதத் தலைவர்களின் சிலைகள் இருப்பது, போக்குவரத்து நெரிசல், ஒலிபெருக்கிகளின் பயன்பாடு மற்றும் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, நிலவும் சூழ்நிலைகளைப் பொறுத்து உள்ளூர் காவல் துறையினர் பரிந்துரைக்கும் மாற்றங்களுக்கு உட்பட்டு, அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஊர்வலங்களை நடத்த மாநில அரசு சம்மதம் தெரிவிப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஊர்வலங்கள் குறித்த விவரங்களையும், அதாவது வழித்தடங்கள், ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான இடங்கள் உள்ளிட்டவற்றை ஆர்.எஸ்.எஸ் வழங்கியது.
மேலும், முந்தைய நீதிமன்ற நடவடிக்கைகளில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
கடந்த விசாரணையின்போது நீதித்துறை எழுப்பிய முக்கிய கேள்விகள்;
வழித்தடத்தில் மாற்று மத வழிபாட்டுத் தலங்கள் (பள்ளிவாசல்கள், தேவாலயங்கள்) உள்ளன" என்றும், "சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்" என்றும் கூறி ஒவ்வொரு வருடமும் காவல்துறை அனுமதி மறுப்பதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையிலும், மீண்டும் அதே காரணங்களைக் கூறுவது ஏற்புடையதல்ல. என தெரிவித்தார்.
வழித்தடத்தில் பள்ளிவாசல் இருப்பதால் இஸ்லாமியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்களா? அவர்களாக வந்து யாதொரு புகாரும் அளிக்காத போது, காவல்துறையே ஏன் இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையில்லாமல் கெட்ட பெயரை உருவாக்குகிறது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் போது, அமைதியான தமிழ்நாட்டில் ஏன் சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி மறுக்க வேண்டும் என்றும், அரசு தனது சொந்த குடிமக்களை எதிரிகளைப் போல நடத்தக் கூடாது என்றும் சாடினார்.