புழல் சிறையில் ஜெம் வீரமணியிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி., பல முக்கிய பிரமுகர்கள் தொடர்புடைய தகவல்களை சேகரித்து வருகிறது. 7 போக்சோ வழக்குகளில் குற்றவாளியாக உள்ள வீரமணியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 27-ந்தேதி 2-ம் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழில் அதிபரான ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஐ.டி. என்று அழைக்கப்படும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையிலான 4 பெண் போலீஸ் அதிகாரிகள் வழக்கு விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர்.
இதற்கு முன்னர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் பொறுப்பில் இருந்த போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் அப்போது சரியாக விசாரணை நடத்தாமல் வீரமணியை தப்ப விட்டு விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் போலீஸ் அதிகாரிகள் சிலரும், அரசியல் பிரமுகர்கள் சிலர் இருப்பதாகவும் எழுந்துள்ள புகார் குறித்தும் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட 4 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ள சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் திரட்டி உள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரமணி மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது. அவர் மீது இதுவரை 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், 3 வழக்கில் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள வீரமணி வீட்டில், 2 முறை போலீசார் சோதனை நடத்தி, டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அவை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 சிறுமிகள் வீரமணியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக வீரமணியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். தற்போது வீரமணிக்கு 84 வயதாவதால் சிறையில் வைத்தே அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து 2 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தும் போலீசார் வாக்குமூலத்தையும் பதிவு செய்கிறார்கள்.
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் ஏற்கனவே முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வருகிற 27-ந்தேதி 2-ம் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். வீரமணியிடம் விசாரணையை முடித்த பிறகு தொடர்ந்து வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இதன் பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜெம் வீரமணி விவகாரத்தில் இதுவரை அவருடன் இருந்து கொண்டு பாலியல் சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரமணியிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அவரை மிரட்டியவர்கள் யார், யார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவில் இந்த வழக்கில் அடுத்தக்கட்டமாக அரசியல் பிரமுகர்கள் சிலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.