கொலை 
தமிழக செய்திகள்

குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்திருந்த வாலிபரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த கும்பல்- திருவல்லிக்கேணியில் அதிர்ச்சி சம்பவம்

வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள், அஜித்திடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி, அவரை வீட்டின் வாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வாலிபரை வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள் வெளியே அழைத்துச் சென்ற நிலையில், அங்கு வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு, கிருஷ்ணா பேட் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான அஜித். ஏர்டெல் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வந்ததாக கூறப்படும் அஜித், சம்பவத்தன்று தனது வீட்டில் தந்தை நடராஜன், தாய் சராசம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள், அஜித்திடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி, அவரை வீட்டின் வாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இரண்டு பெண்கள்

அங்கு அஜித்துடன் அந்த இரண்டு பெண்களும் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், அஜித்தை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அஜித்தை சரமாரியாக முகம் தலைப்பகுதிகளில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த அஜித், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஜித்தின் தந்தை நடராஜனும், தாய் சரசம்மாளும் மகனை காப்பாற்றுவதற்காக ஓடிச்சென்றுள்ளனர். அப்போது மர்மநபர்கள், அவர்களையும் கத்தியைக் காட்டி தாக்க முயன்றுள்ளனர். இதில் மகனை காப்பாற்றச் சென்ற சராசம்மாளின் கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சிகிச்சை

மேலும் உயிரிழந்த அஜித்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அவரது தாயார் சரசம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அஜித்தை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து, பின்னர் மர்மநபர்கள் தாக்கியிருப்பதால், இந்த கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் ஐஸ் ஹவுஸ் D3 போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்துக்கும் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா? அஜித்தை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்த இரண்டு பெண்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அஜித்தை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்திருந்த வாலிபரை, சினிமா பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு வெளியே வரவழைத்து மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT