தீபாவளி விற்பனைக்காக அவசரமாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் 50 கோடி மதிப்பிலான 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மர்மநபர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை நிகழ்த்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் தடயங்களை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் நகை பிராண்டாக தனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு தங்கம் மட்டுமின்றி வைர நகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மதுரையில் ஏற்கனவே கிழக்கு வெளி வீதியில் கிறிஸ்டியன் மிஷன் ஆஸ்பத்திரி அருகிலும், அண்ணா நகர் 80 அடி சாலையில் பஸ் நிறுத்தம் அருகே என இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மதுரையில் தனிஷ்க் ஜூவல்லரியின் மூன்றாவது கிளை பழங்காநத்தம் ரெயில்வே பாலம் அருகில் நேரு நகர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இருந்தபோதிலும் கடையின் பின்புறம் இன்னும் கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை. சாரம் கட்டி பகல் நேரங்களில் கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். பணிகள் முழுமை பெறாத நிலையில் தீபாவளி விற்பனையை மையமாக வைத்து அவசரம், அவசரமாக கடை திறக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கடையில் பல கோடி மதிப்பிலான புதிய டிசைன்களில் விதவிதமான தங்கம், வெள்ளி, வைர நகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக வடமாநிலங்களில் உள்ள தங்கள் தயாரிப்பு கூடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நகைகள் ஷோரூமில் ஏராளமாக இருந்தன.
இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். வெளியூர்களை சேர்ந்தவர்கள் தங்குவதற்காக நகைக்கடையில் மாடியில் பிரத்யேகமாக அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர். மேலாளர் முன்னிலையில் கடை பூட்டப்பட்டு அங்கு காவலாளிகள் 5-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை கடையை திறந்து பார்த்தபோது, அங்கு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது. மேலும் அங்குள்ள பொருட்கள், நகைகள் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும் அட்டைகள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதனால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்த ஊழியர்கள் உடனடியாக மேலாளர் மற்றும் தங்களது தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தனிஷ்க் ஜூவல்லரி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கான பல்வேறு கண்ணாடி ரேக்குகளில் அடுக்கி வைத்திருந்த நகைகள் எதையும் காணவில்லை. அனைத்து ரேக்குகளும் காலியாக இருந்ததால் பெரும் பதட்டம் உருவானது.
பின்னர் அவர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பு பணியில் முதற்கட்டமாக 35 கிலோவிற்கும் மேல் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இன்று அதிகாலை சுமார் 3 மணியில் இருந்து 4 மணிக்குள் இந்த துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்த கொள்ளையில் 5-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நகைக்கடையானது தனி கட்டிடமாக அமைந்துள்ளது. மேலும் தற்போது கடையின் பின்புறம் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் அதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு சாரங்கள், கட்டைகளை பயன்படுத்தி கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த கடைக்கு வந்து விசாரணையை தொடங்கினர். மேலும் எஸ்.எஸ்.காலனி போலீசார் மோப்பநாய் உதவியுடன் கொள்ளை நடந்த நகைக்கடையில் முகாமிட்டு அனைத்து பகுதிகளிலும் அங்குலம், அங்குலமாக விசாரணை நடத்தினர். அதேபோல் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.
மேலும் தனிஷ்க் ஜூவல்லரியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அத்துடன் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இன்று காலை சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது வந்து சென்றார்களா? வாகனங்கள் எதாவது வந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற கொள்ளையர்கள் சில நாட்கள் திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும், புதிதாக கடை அமைக்கப்பட்டுள்ளதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் அதிக அளவில் நகைகள் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டும் மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அவர்கள் தங்களை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகமூடி அணிந்திருந்தார்களா? கடைக்குள் புகுந்திருந்த அவர்களது முகம் கடைக்கு உள்ளே பொருத்தப்பட் டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாக இருக்கிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவில் சுமார் 30 சதவீதம் திருடு போயுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
இதனிடையே, நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.