தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு நிலுவையில் உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூ.400 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் மாயமானதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணைக்கு சென்றபோது செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை. வழக்கு விசாரணைக்காக அவரது தம்பி அசோக்கை போலீசார் தேடி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூர் போலீசார் அங்கிருந்து வந்து சென்னையில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
செந்தில்பாலாஜியின் வீட்டில் போலீசார் திடீரென சென்று விசாரணை நடத்தியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் எது தொடர்பான விசாரணைக்காக போலீசார் சென்றனர் என்பது பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாரும் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை. இருப்பினும் போலீசார் வீட்டில் சென்று விசாரணை நடத்தியது உண்மைதான் என்றும் அதுபற்றி தகவல்களை இப்போது எதுவும் வெளியிட முடியாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.