திருச்சி திமுக நிர்வாகிகள் துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாமல் நடந்த இந்த போராட்டத்தில் 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனு அளிக்க சென்ற நபரை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும், திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது.
எனவே அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் துறையூர் பழைய பேருந்து நிலைய அண்ணா சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ துரை துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சரண்யா மோகன் தாஸ் உள்பட 137 பேர் மீது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.