தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதையடுத்து, அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனுவை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு தொடங்கியது. அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், காவல்துறை தரப்பு வாதம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் காவல்துறை சார்பில் வாதத்தை முன்வைத்தார்.
* முத்துக்குமாரும் அன்பில் மகேஷும் மிகவும் நெருக்கமானவர்கள்.
* அரசகுமார், முத்துக்குமாருடன் சேர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத்தை நடத்தினர்.
* அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி பணம் வசூலித்துள்ளனர்.
* ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து பள்ளி உரிமையாளர்களான புகார்தாரர்களுக்கு தெரியாது.
* அன்பில் மகேஷ் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல.
* அன்பில் மகேஷ் கைதான 2 நாள்களில் முத்துக்குமார் சரணடைந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அன்பில் மகேஷ் தான்.
* தனியார் பள்ளிகளிடம் அன்பில் மகேசுக்காக பணம் வசூலித்து கொடுத்தது முத்துக்குமார் தான்.
* அன்பில் மகேஷ் வீட்டிற்கு சரவணன் என்பவர் பணத்தை எடுத்து சென்ற வீடியோ ஆதாரம் உள்ளது.
* விஞ்ஞான ரீதியிலான ஊழல். அது பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.
விஞ்ஞான ரீதியிலான ஊழல் என கூறியதற்கு அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து காவல்துறை வாதத்தில்,
* பள்ளிகள், மாணவர்கள் நலனுக்காக 20 ஆண்டுக்கு ஒரு அங்கீகாரம் என்ற அரசாணை கொண்டு வரப்படவில்லை.
* 3 ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகாரம் பெறுவதால் தனியார் பள்ளிகளுக்கு அதிக செலவு ஏற்படும். அதனால் தனியார் பள்ளிகளிடம் இருந்து 400 கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டது.
* முத்துக்குமாரை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டும். அதுகுறித்து அன்பில் மகேசிடம் விசாரிக்க வேண்டி உள்ளது.
* முத்துக்குமார் கூறும் விவரங்கள் உண்மையா? என அன்பில் மகேசிடம் விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜாமின் தரக்கூடாது.
* அன்பில் மகேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று வாதம் நடைபெற்றது.