தமிழக செய்திகள்

‘இன்னும் சில மாதங்களில் ஆந்திராவிலும் பா.ம.க.’ - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

2031-ல் பாமக ஆட்சி வரவேண்டும் என்பதை நினைவில்கொண்டு நிர்வாகிகள் உழைக்கவேண்டும்.

ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர்.,

“100 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு காரணம் ராமதாஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான். இதை சாதி கணக்கெடுப்பு என புரியாதவர்கள் பேசுகிறார்கள். இதை எடுத்தால்தான் தமிழ்நாடு முன்னேறும். அதுதான் நமது இலக்கு.

2031-ல் பாமக ஆட்சி வரவேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் நம்மால் வெற்றிப்பெற முடியவில்லை. ஆனாலும் தேர்தல் முடிந்து தலைநிமிர்ந்து நின்றுக் கொண்டிருக்கிறோம். மற்ற கட்சிகள் துவண்டு விட்டன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முதலில் குரல் கொடுப்பது பாமகதான்.

அனுபவம் இல்லாத தவெக அரசுக்கு நாம் ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கி வருகிறோம். எனக்கு ஈகோ இல்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். மக்கள் அங்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக வேலை நடந்துவருகிறது. வருகின்ற சனிக்கிழமை பனையூரில் ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் வருகிறார்கள். அடுத்தக் கட்டத்திற்கு இதனை நாம் எடுத்து செல்லவேண்டும். இதற்கு காரணம் நீங்கள்தான். நம் கொள்கைகள்தான் நமது பலம்.” என தெரிவித்தார்.