ராமதாஸ் உடன் அன்புமணி 
தமிழக செய்திகள்

தந்தை ராமதாஸ் உடன் அன்புமணி மீண்டும் சந்திப்பு!

பாமவின் 38 வது ஆண்டுவிழா வரும் ஜூலை 16 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

பாமக நிறுவனரும் தன் தந்தையுமான ராமதாஸை, அன்புமணி ராமதாஸ் மீண்டும் நேரில் சந்தித்துள்ளார்.

சந்திப்பு

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தந்தையிடம் இருந்து பிரிந்து சென்ற அன்புமணி தற்போது பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார்.

இந்நிலையில் பாமவின் 38 வது ஆண்டுவிழா வரும் ஜூலை 16 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த சூழலில் ஆண்டுவிழாவையொட்டி கட்சி பணிகள் குறித்து இன்று தந்தையுடன் அன்புமணி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமகவின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

அண்மையில் அன்புமணியை சந்தித்த ராமதாஸ் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றிருந்தார். இந்நிலையில் இன்றைய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அன்புமணியின் டைலமா..

தமிழக சட்டமன்றத் தேர்தளுக்கு முன்பாக பாமக இரண்டாக உடைந்தது. தந்தை ராமதாஸ் உடனான கருத்து வேறுபாட்டால் அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் தனியே சென்றார்.

அவரது அணியே பாமக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து மாம்பழ சின்னம் ஒதுக்கியது. அன்புமணி, அதிமுக-பாஜகவின் என்டிஏவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து 4 இடங்களில் வெற்றியும் பெற்றது.

ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனி அணியாக, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார். இருப்பினும் வெற்றி பெறவில்லை.

தேர்தலுக்கு பின் தவெக ஆட்சி அமைத்த நிலையில் தமிழக அரசியல் தலைகீழாக மாறி வருகிறது. அன்புமணி இடம்பெற்ற அதிமுக கூட்டணி கட்சித் தாவல்களால் திணறி வருகிறது. அதிமுகவில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் தவெகவுக்கு தாவினர்.

தற்போதுள்ள அசாதாரண சூழலில் அன்புமணி தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். இந்த சூழலில் தந்தை ராமதாசை அன்புமணி மீண்டும் நேரில் சந்தித்துள்ளது உற்றுநோக்கப்படுகிறது.