தமிழக செய்திகள்

மார்ச் 1-ந்தேதி மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்!

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

இந்த திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வாசல் வழியாக சென்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காரில் இருந்தபடி தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை முன்னிட்டு கோவில் வாசலில் இருந்து கருவறை வரையிலும் அதிகாரிகள் பார்வையிட்டு உள்ளனர். கருவறைக்கு முன்னதாக உள்ள மகாமண்டபத்தின் படிக்கட்டுகளில் பிரதமர் ஏறி கருவறைக்கு எளிதாக சென்று வர வசதியாக படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்தும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இன்று போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை கோவிலில் பிரதமர் தரிசனம் செய்துவிட்டு திரும்புவார் எனவும் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஓரிருநாளில் தெரிய வரும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT