தமிழக செய்திகள்

காதலிக்க மறுத்த ப்ளஸ் 1 மாணவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் தற்கொலை

மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது28). எலக்ட்ரீசியன்.

ஒருதலைக்காதல்

இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அய்யப்பன், பலமுறை அந்த மாணவியை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆனால் அந்த மாணவியோ, அய்யப்பனை காதலிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் மாணவி மீது அய்யப்பன் கோபத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.

கத்திக்குத்து

இதனை அறிந்து கொண்ட அய்யப்பன் மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியை சந்தித்த அய்யப்பன், என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். ஆனால் இந்த மிரட்டலுக்கு எல்லாம் மாணவி பயப்படாமல் உன்னை காதலிக்க முடியாது என்று கூறினார்.

இதனால் கடும் கோபம் அடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் மாணவி பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

விசாரணை

மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யப்பனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியவர் யார் என விசாரணை நடத்தினர்.

வாலிபர் தற்கொலை

அப்போது அது மாணவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான அய்யப்பன் என்பது தெரியவந்தது. தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் மாணவியை கத்தியால் குத்திய அய்யப்பன் அங்கிருந்து ஓடியுள்ளார்.

எப்படியும் போலீசார் தன்னை பிடித்து விடுவர் என்று நினைத்த அவர் அரசுகலைக்கல்லூரி பின்பு றம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.