தமிழக செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணியால் பிளஸ் 2 மாணவி தற்கொலை? 12 ஆண்டுகளுக்கு பிறகு தாயார் புகார்!

தீக்கிரையான காவல் நிலையக் கோப்புகளுக்கு நடுவே நீதிமன்ற இணையதளம் மூலம் ஆதாரங்களைத் திரட்ட காவல் துறை திட்டம்.

மாணவியின் தாயார் 12 ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்ததாகக் கூறிய நிலையில், அந்த ஆவணங்களை மீட்டெடுக்கும் பணியில் காவல் துறை இறங்கியுள்ளது.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியால், கடந்த 2014-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவரது பெண் உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறப்பு காவல் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி உதவி என்ற பெயரில் நடந்த கொடுமை

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்புச் செலவை வீரமணி ஏற்றுக்கொள்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது மகளின் பள்ளி படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட வீரமணி, அவரை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்.

மாணவி பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவரை வீரமணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி 2014-இல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அப்போதே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வீரமணி தனது பணபலம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்பித்துவிட்டதாக மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளதால், தனது மகளின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிக்கப்பட்ட காவல் நிலைய ஆவணங்கள்

மாணவியின் தாயார் 12 ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்ததாகக் கூறிய நிலையில், அந்த ஆவணங்களை மீட்டெடுக்கும் பணியில் காவல் துறை இறங்கியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீக்கிரையானது. அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வந்த ஏராளமான வழக்குக் கோப்புகளும் ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இதனால் இந்த மாணவியின் தற்கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் எரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இருப்பினும், 2014-இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கும் என்பதால், இணைய வழி ஆவணங்களைக் கைப்பற்றி அதன் மூலம் வழக்கின் உண்மைத் தன்மையை உறுதி செய்யக் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT