கொலை 
தமிழக செய்திகள்

கரூரில் அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதலை கண்டித்ததால் மாணவி அடித்து கொலை- காதலனோடு சேர்ந்து சகோதரி வெறிச்செயல்

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு அங்குலம் அங்குலமாக மாணவியின் உடலை தேடினார்கள்.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள்கள் வினோதினி (வயது 21), தர்ஷினி (17). இவர்களில் வினோதினி கரூர் வெங்கமேட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். தர்ஷினி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இதுபற்றி வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வந்தனர். தர்ஷினியின் சகோதரி வினோதினி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரது குடும்பத்தினரின் செல்போன்கள் உள்ளிட்டவையும் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள்.

கொடூர கொலை

இதில் மாணவியின் சகோதரியான வினோதினி வாலிபர் ஒருவரோடு பழகியது தெரிய வந்தது. அவருக்கு திருமணமான நிலையிலும் வினோதினி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பிளஸ்-2 மாணவியான தர்ஷினி கண்டித்துள்ளார். உனது தொடர்பு பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விடுவேன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த வினோதினியும், கள்ளக்காதலனான மோகன்ராஜ் என்ற வாலிபரும் பிளஸ்-2 மாணவியை கொடூரமாக கொலை செய்து வீசி இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த வழக்கில் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வினோதினியையும், மோகன்ராஜையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வினோதியின் கள்ளக்காதலனான மோகன்ராஜ் கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரும், வினோதினியும் செல்போனில் பேசி அதன் மூலமாக தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷயம் தர்ஷினிக்கு தெரிந்த பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்கை என்றும் பாராமல் தர்ஷினியை கள்ளக்காதலனோடு சேர்ந்து வினோதினி தீர்த்துக் கட்டியுள்ளார்.

இதை தொடர்ந்து மோகன்ராஜை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

காட்டுப்பகுதியில்

தர்ஷினியை கொலை செய்து, உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை வீசியதாக மோகன்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று உடலை தேடும் பணியையும் முடுக்கி விட்டார்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு அங்குலம் அங்குலமாக மாணவியின் உடலை தேடினார்கள்.

சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மாணவியின் தர்ஷினியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலையொட்டிய பகுதியில் புதர் மண்டிய இடத்தில் அழுகிய நிலையில் தர்ஷினியின் உடல் கிடந்தது. அருகில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதையும் போலீசார் கைப்பற்றினர். உடல் அழுகியதில் தனியாக தலை துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் வைத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மாணவியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைதான மோகன்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் நெய் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தேன். வினோதினி வெங்கமேட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படவே நெருங்கி பழகி வந்தோம். இது காதலாக மாறியது. 2 வருடங்களாக பழகி வந்தோம். எனக்கு திருமணமான நிலையிலும் நான் வினோதியுடன் பழகி வந்தேன்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி வினோதினியின் வீட்டிற்கு சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அவரது தங்கை தர்ஷினி யார் நீ? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டு என்னுடன் தகராறு செய்தார். எனது அக்காவுடன் உனக்கு என்ன பேச்சு? இது சரியில்லை என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரத்தில் நான் தர்ஷினியின் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டேன். அப்போது அருகில் இருந்த பிரிட்ஜில் மோதி தலையில் அடிபட்டது. இதில் தர்ஷினி மயங்கி கீழே விழுந்தார்.

மோட்டார் சைக்கிளில்

தர்ஷினி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து வினோதியும், நானும் வீட்டில் இருந்து தர்ஷினியின் உடலை எனது மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கி சென்றோம். பின்னர் வெங்கமேடு-வாங்கல் இணைப்பு சாலையில் காமதேனு நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டோம்.

இவ்வாறு மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து மோகன் ராஜூடன் வினோதினியையும் கைது செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT