பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவு மே 8-ந்தேதி (நாளை) வெளியாகும் என தற்காலிக அட்டவணையில் அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது. வழக்கமாக அரசு தேர்வுத் துறை தெரிவிக்கும் அந்த நாளிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவோ தேர்வு முடிவு வெளியிடப்படுவது வழக்கம்.
ஆனால் நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்வு இருக்கிறது. தற்போது புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை சொல்லியிருந்த அதே தேதியில் தேர்வு முடிவு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் இருந்தது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, அதற்கு வாய்ப்பு குறைவு என்றே தெரிவித்தனர்.
அரசுத் தேர்வுத் துறை இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் குறித்த விவரம் ஒரு நாளைக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் அளிக்கப்படும்' என தெரிவித்துள்ளது. இதன்படி பார்க்கும் போது, இன்று (வியாழக்கிழமை) தேர்வு முடிவு குறித்த முன்னறிவிப்பு வந்தால் மட்டுமே நாளை (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவு வெளியிடப்படும். அப்படி இல்லையென்றால். தேர்வு முடிவு தள்ளிப்போகவே அதிகம் வாய்ப்புள்ளது.